மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி தற்போது பாஜக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. மோடியின் 400 என்ற கனவை காலியாகி தனி பெரும்பான்மை கூட கிடைக்காமல் செய்துவிட்டோம் என்ற கொண்டாட்டத்தில் காங்கிரஸ் உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியில் 400க்கும் 400 வென்று விட்டோம் என்று திமுக வெடி வெடித்து கொண்டாடி வருகிறது. இந்த பரபரப்பில் அதிமுக தொண்டர்கள் மட்டும் சோகத்தில் இருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாக்கு வங்கி குறைந்து வருகிறது . ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் இறக்கிவிடப்பட்டு தோல்வியை தழுவினார்.

இந்த சூழலில் மீண்டும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற அறிக்கை மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு மறைமுகமாக வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்  எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், “என் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். இப்படி சொன்ன பிறகும் நான் பாஜவில் இணையப் போவதாக யாராவது பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சுயநலத்துக்காக சொல்கிறார்கள். எனது அணியில் இருந்து விலகுவோர் இக்கரைக்கு பச்சை என்று செல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.