கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான்  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்க தவறிவிட்டது. இதனால் அந்த நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாத காரணத்தினால் சிலிண்டருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் சிலிண்டர் விற்பனையாளர்கள் விநியோகத்தை வெகுவாக குறைத்துள்ளனர். இதன் எதிரொலியாக அந்த நாட்டு மக்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து தற்போது இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறியதாவது, கியாஸ் விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் பைகளில் மூன்று அல்லது நான்கு கிலோ கியாஸ் நிரப்ப சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது எனவும் கியாஸ் நிரப்பிய பைகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடி கொடுக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள் அதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய உறிஞ்சிக் குழாயை பொருத்தி பயன்படுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையே இதுபோன்ற செயல் கையில் வெடிகுண்டு எடுத்துச் செல்வதற்கு சமம் எனவும் இதனால் மிகவும் மோசமான விபத்துக்கள் நிகழக்கூடிய அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.