திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நித்தியா (24) என்று 5 மாத கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். இவர் வரிசையில் காத்திருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் மலையின் மேல் பிரகாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நித்யாவை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் மின் இழுவை ரயில் மூலம் மலையடிவாரத்திற்கு கொண்டு வந்து அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் இல்லாததால் கோவிலுக்கு சொந்தமான ஆம்புலன்ஸில் பழனி அரசு மருத்துவமனைக்கு நித்யாவை கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு டிரைவர் இல்லாததால் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவர்தான் ஆம்புலன்ஸை ஒட்டி சென்றார். அதோடு ஆம்புலன்சில் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாததோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாமல் நித்தியா தனியாக தான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதேபோன்று மின் இளுவை ரயிலில் சென்ற மூதாட்டி ஒருவருக்கு இரும்பு தகடு காலில் விழுந்து ரத்தம் கொட்டியது. அவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் அப்போதும் மருத்துவர்கள் இல்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நிர்வாகிகளுடன் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பழனி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரும் நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் இருந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.