உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் லக்னோவிலுள்ள பள்ளிகளில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை  செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தின் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில், மாணவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீதாபூரில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக 1 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 4-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். வாட்ஸ் அப் வாயிலாக மாணவர்களின் பெற்றோருக்கு இத்தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி  கோரக்பூரில் இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு எல்.கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாப், அரியானா, சண்டிகார், டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வருகிற வியாழக்கிழமை வரை கடும் பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மேற்கு இந்தியாவின் சம வெளிகளில் இமயமலையிலிருந்து வடமேற்கு காற்று வீசுவதால், அடுத்த 2 நாட்களில் வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய இந்தியாவில் குறைந்தபட்சம் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.