பல்லில் அலுமினியம் பாஸ்பேட்டை வைத்த பெண்…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என்.பாளையம் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காடம்புலியூரில் இருக்கும் தனியார் முந்திரி தொழிற்சாலையில் பார்சல் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தனலட்சுமி பல் வலியால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். வழக்கமாக தொழிற்சாலையில் முந்திரியை பதப்படுத்தி வைக்கும் அட்டை பெட்டிக்கு பூச்சிகள் வராமல் தடுக்க அலுமினியம் பாஸ்பேட்டை பயன்படுத்துவர்.

இந்நிலையில் பல் வலி அதிகமானதால் தனலட்சுமி அலுமினியம் பாஸ்பேட்டை வலி ஏற்பட்ட பல்லில் வைத்ததால் சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக தனலட்சுமி மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.