விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னூர் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் களப்பணியில் ஈடுபட்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் சிற்பத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, சோழர் கால சைவ, வைணவ கோவில்கள் இந்த கிராமத்தில் இருக்கிறது. இது தொடக்க காலத்தில் சம்புவராயர்களின் தலைநகராகவும் இருந்துள்ளது. இந்நிலையில் செல்லியம்மன் கோவிலுக்கு எதிரே 5 அடி உயரமுள்ள பலகைக்கல் சிற்பம் இருக்கிறது.

இந்த சிற்பத்தை அந்த பகுதி மக்கள் செல்லியம்மன், காளி என வழிபட்டு வருகின்றனர். தற்போது அந்த சிற்பம் சிவனின் 28-வது அவதாரமான லகுலீசர் என்பது அறியப்பட்டுள்ளது. அவர் வலது கையில் தண்டத்தை ஏந்தியும், இடது கையை தொடையின் மீது வைத்து ஒரு காலை மடித்தும், இன்னொரு காலை தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்து உள்ளார். இந்த சிற்பம் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது. தற்போது அந்த கிராம மக்கள் ஆண் தெய்வம் என அறிந்து சிற்பத்தை வழிபட ஆரம்பித்தனர்.