திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாமரைபாடி சாலையூரில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காளியம்மாள் தாமரைபாடியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த ராஜா(60), அவரது மகள் பிரியா(38) பேத்தி மெல்வினா(5) ஆகியோரும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த 4 பேர் மீதும் பலமாக மோதியது. உடனடியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே காளியம்மன் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் ராஜா, பிரியா, மெல்வினா ஆகிய மூன்று பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.