பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் பதான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரம் குறித்த தகவலை தற்போது படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் இந்தியாவில் 355 கோடியும், வெளிநாடுகளில் 208 கோடியும் வசூலித்துள்ளது. மேலும் மொத்தமாக பதான் திரைப்படம் 543 கோடி வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பதான் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. இது இந்தியா மற்றும் உலக அளவில் கொண்ட நேர்மறையான எண்ணங்களுக்கு கிடைத்த வெற்றி. இது பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த பதிலடி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பதான் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே காவிநிற உடையில் பிகினி அணிந்து கவர்ச்சி நடனம் ஆடியிருந்த நிலையில் அதற்கு பாஜக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இப்படி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.