
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வெற்றி பெற 36 தொகுதிகளில் போதும் என்ற நிலையில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியை பாஜக கைப்பற்றியது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததால் முதல்வர் அதிஷி இன்று காலை 11 மணிக்கு டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே சக்சேனாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். பாஜக வெற்றி பெற்ற நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பர்வேஷ் ஷர்மா, பன்சூரி ஸ்வராஜ் மற்றும் வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.