ஆந்திர மாநிலம் சென்னரெட்டிபள்ளியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விவசாயி. கடந்த 7- ஆம் தேதி ராமகிருஷ்ணா தனது குடும்பத் தேவைக்காக வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். அதன் மூலம் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி மோட்டார் சைக்கிளின் பின்புறம் வைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார்.

இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டல் எதிரே வாகனத்தை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் செல்ல முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் ராமகிருஷ்ணாவை பின்தொடர்ந்து வந்து பைக்கில் இருந்த பணத்தை திருடி விட்டு தப்பி சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணா அந்த நபரை விரட்டி சென்றும் பிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் திருடனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் சீனிவாசபுரம் பகுதியில் தூய்மை பணியாளரான சுரேஷ் என்பவர் குப்பைகளை சேகரிக்க முயன்ற போது கட்டுக்கட்டாக பணம், வங்கி பாஸ்புக், பான் கார்டு ஆகியவை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவற்றை காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார்.

தொடர்ந்து போலீசார் பாஸ்புக்கை வைத்து விசாரணை நடத்திய போது பணமும், பாஸ்புக்கும் ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை வரவழைத்து பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையாக பணத்தை ஒப்படைத்த சுரேஷை போலீசார் பாராட்டியுள்ளனர்.