திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியில் தீபக் ராஜா (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இவர் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீபக் ராஜா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தீபக் ராஜாவுக்கும் வேறொரு கும்பலுக்கும் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த தீபக் ராஜா மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.