பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க… மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேர்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் சிறப்பு வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 22-ஆம் தேதி இந்த ஆண்டிற்கான திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவில் கிளி வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், காளை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நேற்று முன்தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். அதன்பின் தேர் நான்கு ரத வீதி வழியாக வந்து நிலையை வந்தடைந்தது.