மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான ஊர்மிளா பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்துள்ளது. அவரை அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. பலமுறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வராததால் குடும்பத்தினர் ஊர்மிளாவை கைவண்டியில் அழைத்துச் சென்றனர்.
ஊர்மிளாவை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாததால் கைவண்டியிலேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு குழந்தை பிறந்தது. ஆனால் பச்சிளம் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான உமாங் சிங்கார் “சுகாதார அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இத்தகைய பிரச்சனை என்றால் மாநிலம் முழுவதிலும் உள்ள நிலை என்னவென்று புரிந்து கொள்ள முடியும்” என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.