நியூசிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது. இந்த மழையால் அந்த நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும் சேதம் அடைந்துள்ளது. இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் அப்பகுதி மக்கள் மீளவில்லை.

இந்த நிலையில் அந்நாட்டை கேப்ரியல் என்ற சக்தி வாய்ந்த புயல்  தாக்கியுள்ளது. இந்த புயல் ஆக்லாந்து உட்பட ஆறு மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த புயலினால் சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தும் மின்கம்பிகள் அருந்தும் விழுந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கேப்ரியல் புயலால் நிலச்சரிவு மற்றும் கடல் சீற்றங்கள் ஏற்படுவதால் அந்நாட்டில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது “மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஏதுவாகவே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.