தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் மைதுகனி (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டமலை பகுதியில் இருக்கும் வயலை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்துள்ளார். இவருக்கு ராமலக்ஷ்மி என்ற மனைவியும், முருகேசன், சக்திவேல் ஆகிய இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைதுகனி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பக்கத்து வயல்காரரான குருவையா அவரது தம்பி சின்ன மாரியப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது அண்ணன் தம்பி இருவரும் வயலில் நெல் பயிரிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் சக்திவேல் அடிக்கடி நண்பர்களுடன் வயலுக்கு சென்று சமையல் செய்து சாப்பிட்டு கழிவுகளை வயலில் போட்டு சென்றுள்ளார். இதனை பக்கத்து வயல்காரர்களான குருவையாவும், அவரது தம்பியும் தட்டி கேட்டபோது சக்திவேலும், அவரது நண்பர்களும் இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும் அவர் வளர்த்து வந்த வேட்டை நாய்கள் வயலுக்குள் புகுந்து கோழி, மாடுகளை கடித்து குதறியது. இதுகுறித்து புகார் அளித்து போலீசார் எச்சரித்தும் மைதுகனியும், அவரது மகன் சக்திவேலும் தொடர்ந்து இடையூறு செய்துள்ளனர். இதனால் கோபத்தில் அண்ணன், தம்பி இருவரும் மைதுகனியை கொலை செய்தது தெரியவந்தது.