தமிழக பாஜகவில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் விளைவாக பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு இல்லை என்று தொடர் குற்றச்சாட்டுகளை கூறிவரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராகவும் அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை சுமத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகியதாக காலை முதல் செய்திகள் பரவியது.

இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்து தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நான் எந்த கட்சியிலும் இல்லை. ஏதாவது கட்சியில் இருந்தால் தானே விலக முடியும். நான் எந்த கட்சியாக இருந்தாலும் நல்லது என்றால் பாராட்டுவேன். தவறாக இருந்தால் விமர்சிப்பேன். எனக்கு அரசியல் தொடர்புகளோ அரசியலுக்கு வரும் என்னமோ கிடையாது. நான் ஆன்மீகத்தை பின்பற்றுகிறேன் தவிர எந்த மதத்தையோ, மத அடையாளத்தையோ இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த விளக்கத்தால் பாஜகவில் இருந்து விலகியதாக பரவிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.