நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

2024 ஐபிஎல் போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்தது. மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 34 ரன்களும்,திலக் வர்மா 32 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 15.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 127 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. ராஜஸ்தான் அணியில் ரியான் பராக் 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 54* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து 3வது வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம் மும்பை அணி குஜராத், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இந்த அணியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இருந்தால் நாங்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை, நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நாங்கள் தொடர்ந்து செல்வோம்” என தெரிவித்துள்ளார்..