சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு ‌ விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது, நடக்கிற பிரச்சனைகள், கொடுமைகள் எல்லாத்துக்கும் நாம் குரல் கொடுக்கணும். ஆனா நடக்கிற பிரச்சனைகள் ஒன்னு ரெண்டு இல்ல. பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, மனித உயிர்களுக்கு எதிராக தினம் கொடுமைகள் நடக்குது.

அதை நம்ம பார்க்கிறோம், படிக்கிறோம், மத்தவங்க கிட்ட இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம். இதற்கெல்லாம் நிரந்தரமா ஒரு தீர்வு இருக்கு.  நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாக நேசிக்கிற ஒரு நல்ல அரசு அமைஞ்சிட்டாலே போதும்.

தினம் தினம் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்துக்காக ட்வீட் போடறது, சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுறது, சம்பிரதாயத்துக்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டுவது, சம்பிரதாயத்துக்காக மழை தண்ணீரில் நின்னு போட்டோ எடுக்கிறது, எனக்கு அதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. ஆனா என்ன பண்றது நம்மளும் சம்பிரதாயத்துக்காக சில நேரம் அந்த மாதிரி செய்ய வேண்டியதா போயிருச்சு.

நான் என்ன சொல்ல வர்றேன்னா என்னை ஒவ்வொருத்தரும் அவங்க குடும்பத்துல ஒருத்தனா நினைச்சுட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல அவங்களுக்கு எங்க என்ன பிரச்சனை நடந்தாலும் அவங்களோட உரிமைகளுக்காகவும் அவங்களோட உணர்வு பூர்வமாக இருப்பேன். எப்பவும் அப்படித்தான் இருப்பேன் என கூறியுள்ளார்.