சென்னை அசோக் நகரில் உள்ள தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி சர்வதேச புகழ் பெற்ற பெண் விளையாட்டு வீராங்கனை ஒருவர் புகார் அளித்தார். அவருக்கு வந்த பிரச்சனையில், ஒருவர் தன்னை பெண் விளையாட்டு வீராங்கனை போல் ஆள்மாறாட்டம் செய்து இரவு நேரங்களில் வாட்ஸ் அப் மூலம் தொந்தரவு செய்து வந்ததாக கூறினார்.
இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு நபர் பிரபலமான பெண் விளையாட்டு வீராங்கனையின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியாக வைத்து, அருவருக்கத்தக்க வார்த்தைகளுடன் தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அவர் அந்த எண்ணை தடை செய்திருந்தாலும், அந்த நபர் தொடர்ந்து புதிய எண்ணுகளை பயன்படுத்தி தொந்தரவு செய்துள்ளார்.
பெண் வீராங்கனை அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு சைபர் போலீசார் அதற்கான விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாசிலி சிவா தேஜா (30) என்ற நபர் இரவு நேரங்களில் இந்த தொந்தரவுகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் பின் சைபர் குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு சென்று, சாசிலி சிவா தேஜாவை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.