நள்ளிரவில் அலறி சத்தம் போட்ட ஆடுகள்…. நிம்மதியின்றி தவிக்கும் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதுடன், 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார் கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டதால் சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 16 ஆடுகள் கழுத்து, முதுகு பகுதிகளில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த சக்திவேல் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது வெறி நாய்கள் கடித்ததால் ஆடுகள் இறந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் வெறி நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆடுகளை வேட்டையாடும் வெறி நாய்களை பிடிக்க மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.