திருச்சி மாவட்டத்தில் உள்ள குண்டூரில் வசந்தா மாரிகண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. இவரது மகன் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு விமானம் மூலம் வசந்தா சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். தாம்பரத்திலிருந்து திருச்சி செல்வதற்காக அவரிடம் பயணத்திட்டம் இருந்தது. இந்த நிலையில் வசந்தா விமான நிலையத்திற்கு வெளியே வந்து ஆட்டோ மூலம் தாம்பரம் செல்வதற்கு முடிவு செய்தார். ஆனால் அவர் ஏறிய ஆட்டோ தாம்பரத்திற்கு செல்லவில்லை. மாறாக குரோம்பேட்டை அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே திரும்பி பச்சை மலை வழியாக சென்றது.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் கணேசன் வாகனத்தை நிறுத்தி திடீரென வசந்தா அணிந்திருந்த இரண்டு தங்க சங்கிலியை மிரட்டி பறித்துள்ளார். பின்னர் வசந்தாவை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றார். திருடிய நகைகளை விற்று குடும்ப செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கணேசன் தனது மகன் ராம சந்திரனிடன் கூறியுள்ளார். அப்போது நம்பி வந்தவரை இப்படி ஏமாற்றலாமா எனக் கூறி ராமசந்திரன் தனது தந்தையை போலீசில் ஒப்படைத்தார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட வசந்தாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகைகளை மீட்டனர். பின்னர் கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.