நமக்கு 200 தொகுதி முக்கியம்… ஒன்னு கூட குறைய கூடாது… களமிறங்கும் மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி காண வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.

அதில் பேசிய அவர், “பொது குழுவாக இருந்தாலும் சரி செயற்குழு வாக இருந்தாலும் சரி மாவட்ட செயலாளர் கூட்டமாக இருந்தாலும் சரி, நான் ஒரு கருத்தை மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நான் தான் வெற்றி பெறுவோம். ஆனால் அந்த வெற்றியை மிக சாதாரணமாக அடையமுடியாது என்று சொல்லி வருகிறேன். அவருக்காக நம் உழைப்பை, செயலை, பிரசாரத்தை நாம் எந்த அளவுக்கு செலவிடுகிறோமோ அந்த அளவுக்கு நம் வெற்றியை முழுமையாக அடைவோம்.

அதனால் உங்கள் உழைப்பை முழுமையாக இந்த தேர்தலில் பயன்படுத்துங்கள். அப்படிக் கொடுத்தால் மட்டும் தான் நாம் முழு வெற்றியை அடைய முடியும். நம் அனைவருக்கும் ஒரு பொது நோக்கம் இருக்க வேண்டும். யார் வேட்பாளர்? உதயநிதி தான் வேட்பாளர், கருணாநிதி தான் வேட்பாளர் என்ற ஒற்றை எண்ணம் தான் உங்களுக்கு இருக்க வேண்டும். அர்ஜுனன் குறி தப்பாது என்பதை போல, திமுக குறி தப்பாது என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சி, அதன் அதிகார பலம் ஒருபக்கம் உள்ளது. மாநிலத்தில் அதிமுக ஆட்சி, அதன் பணபலம் மறுபக்கம் உள்ளது. நம்மை நேருக்கு நேர் எதிர் கொள்ள முடியாமல் புதிதாக பலரை உருவாக்குகிறார்கள். அதிலும் சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்கி வைக்கிறார்கள். யார் என்ன செய்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது. நாம் மக்கள் மனதை வெல்ல வேண்டும். அதிமுக ஆட்சியால் கடந்த 10 ஆண்டு காலம் பாழாகி விட்டது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் மனதில் உருவாக வேண்டும். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து என்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். தேர்தல் முன்கூட்டியே வரலாம்.

அதனால் இப்போதே தயாராகிறோம். யாருடன் கூட்டணி? யாருக்கு எத்தனை தொகுதி? என்னென்ன தொகுதி? யார் வேட்பாளர்? என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்யும். உங்களிடம் எதிர்பார்ப்பது வெற்றி என்ற ஒரே வார்த்தையை மட்டும் தான். எந்த வாக்கு பெட்டியை திறந்தாலும் உதயசூரியன் மட்டுமே உதிக்க வேண்டும். அதிமுகவை நிராகரிக்க வைப்போம்.

திமுகவை ஆட்சியில் அமர வைப்போம். நம்முடைய இலக்கை 200 தொகுதிகளுக்கு மேல் தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். மிஷன் 200 என்ற இலக்கை நோக்கி நாம் செல்ல வேண்டும். 200க்கு ஒரு தொகுதி கூட குறைய கூடாது. நாம் ஒவ்வொரு நொடியும் உழைத்தால் மட்டுமே 200க்கும் மேல் வெற்றி பெறுவது சாத்தியம். நம்மால் முடியும். நம்மால் மட்டும்தான் முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.