நன்னிலம் சட்டமன்றத் தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி மிகப்பெரியதாக உள்ளது. இங்கு ஊரகப் பகுதிகள் தான் அதிகமாக உள்ளது. 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்கு அடங்கியுள்ளது. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நன்னிலம், வலங்கைமான் பேரளம், கொல்லுமாங்குடி ஆகிய 4 பேரூராட்சிகளும், 147 ஊராட்சிகளும் உள்ளன. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் திமுக 3 முறை, அதிமுக 4 முறை, தமாக 2 முறை இந்திய கம்யூனிஸ்ட் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ். பெரும்பாலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி என்பதால் வேளாண்மை இங்கு முதன்மை தொழிலாக உள்ளது. குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடியும், பருத்தி, கரும்பு, நிலக்கடலை என பணப் பயிர் சாகுபடியும் நடைபெறுகின்றன. ஆண் வாக்காளர்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் மொத்தம் 2,71,466 வாக்காளர்கள் உள்ளனர்.

இத்தொகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், தாள் மற்றும் கயிறு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் தொகுதியின் எம்.எல்.ஏ ஆர்.காமராஜ் நிறைவேற்றிய பணிகளாக பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஐடிஐ  அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலை எதிர்நோக்கி நன்னிலம் தொகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.