திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகர்  பகுதியில்  ஜஸ்டிஸ் குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவரது மகன் தீட்சிதன்(13) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது நண்பரான சுனில் குமார் (13) என்பவருடன்  தீட்சிதன் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதையடுத்து நண்பர்கள்  இருவரும் கிருஷ்ணா கால்வாயில் குளித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக தீட்சிதன் கால்வாயில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுனில் குமார் தீட்சிதனின் பெற்றோரிடம் சென்று நடந்ததை பற்றி விளக்கியுள்ளார். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பல்வேறு இடங்களில் தங்களது மகனை தேடி பார்த்தனர். ஆனாலும் தீட்சிதனை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் ஆவடி தீயணைப்பு படை வீரர்களுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் மாலை வரை மாணவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் கால்வாயில் நீண்ட நேரம் தேடியும் மாணவரை கண்டுபிடிக்க முடியவில்லை.  இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான  மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.