ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, துணி, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் என 1500 கடைகள் அமைந்துள்ளது. மேலும் 500 தற்காலிக கடைகளும் அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் பிரச்சனையாக இருக்கிறது. அதேசமயம் சில நேரங்களில் கால்நடைகள் நடைபாதைகளில் உலா வருகிறது. இதற்கிடையே வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பொருட்களை நடந்து சென்று வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். அதேபோல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க மற்றும் தூய்மை பணியில் ஈடுபடுவதற்கு சிரமம் அடைந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நகராட்சி ஆணையாளர் காந்தி ராஜன் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்கள் சண்முகம் நஞ்சுண்டன் போன்றோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மார்க்கெட்டில் நடைபாதையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். அந்த வகையில் நூறுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் நடைபாதையை ஆக்கிரமிக்க கூடாது.. விற்பனை பொருட்களை கடைக்குள் வைக்க வேண்டும். இதுபோல் மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.