உத்திரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்தரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் கட்டிப்பிடித்தபடி சென்ற  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இணையத்தில் வைரலான இந்த வீடியோ லக்னோவில் இருந்து ஹஸ்தரத்கஞ்ச் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை லக்னோ மத்திய மண்டலத்தின் துணை போலீஸ் கமிஷனர் அபர்ணா ரஜத் கவுசிக் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த காதல் ஜோடியினரை தேட இரண்டு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் அவர்களை பிடிப்பதற்கு அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அந்த ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரோட்டில் ஆபாசமாக நடத்திக் கொண்டதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் கூறியுள்ளனர். வீடியோவில் காணப்பட்ட இரண்டு பேரும் பெண்கள் எனவும் முழு சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீ வஸ்தவ் தெரிவித்துள்ளார்.