சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மற்றும் யுவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் பேசியதாவது, நாங்கள் சிவன் கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிய நிலையில் என்னுடைய அப்பா மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதாக என் அம்மா அழைத்தார். உடனே காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அப்போது திடீரென என் அப்பா தோளில் சாய்ந்து விழுந்ததால் என்னால் தொடர்ந்து வண்டியை ஓட்ட முடியவில்லை. இதனால் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். ஆனால் எப்படியாவது எங்கள் தந்தையை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்புலன்ஸ் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கும் என் அப்பா இறந்து விட்டதாக சொல்லி விட்டார்கள். நாங்கள் முதலில் உதயநிதிக்கு தான் செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பின் உதயநிதி ஸ்டாலின் வருவார் என்று கூறினார்கள். என் அப்பா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி எம்ஜிஆர் ரசிகர்களும் ஏராளமானோர் வந்திருந்தார்கள்.
அனைவருக்கும் நன்றி. நாங்கள் எங்களுடைய அப்பாவின் செல்போனை அணைத்து வைக்கப் போவதில்லை. நாங்கள் அந்த போனை தொடர்ந்து பயன்படுத்துவதோடு அவர் விட்டு சென்ற பணியையும் செய்வோம். என் தந்தையின் மரணம் குறித்து சில youtube சேனல்கள் தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள். மேலும் தொடர்ந்து அவர்கள் தவறான செய்திகளை வெளியிட்டால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.