கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டை பகுதியில் ஜலால்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் நாச்சியார் பேட்டையில் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்து தர கோரி ஜலால்தீன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை அதிகாரிகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஜலால்தீனின் மனைவி சல்மா நேற்று விருதாச்சலம் நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் நில அளவைத் துறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் சல்மா உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் என கூறிவிட்டு சல்மா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.