சேலம் மாவட்டத்தில் உள்ள தோட்டக்காடு பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தென்னை நார் மூலம் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அந்த சமயம் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அனைத்து இடங்களுக்கும் தீவிரமாக பரவியது.

இதுபற்றி அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் மூலப்பொருட்கள், கயிறு தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.