தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய தொகுதியாக இருந்த தொண்டாமுத்தூர் தொகுதி 2008ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் சில பகுதிகளையும்,  மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பல கிராமங்களையும் இந்த தொகுதி உள்ளடக்கியுள்ளது. சிவ தளமான பட்டீஸ்வரர் கோவில், சுற்றுலாத்தலமான கோவை குற்றாலம் இந்த தொகுதியில் சிறப்பு அம்சங்களாகும். கடந்த 2முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே வென்றிருக்கிறது.

இத்தொகுதியில் 7  பேரூராட்சிகளும்  10 ஊராட்சிகளும் இருக்கின்றன. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,24,053 ஆகும். தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. இப்பகுதியின் முக்கிய நீர்ப்பாசனமான நொய்யலாறு புதர் மண்டிக் கிடப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் முழுமையாக கிடைப்பதில்லை என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று 230 கோடி செலவில் அங்கு சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் இப்பகுதியில் பன்னீர் திராட்சை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆகையால் இங்கு குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர். தொண்டாமுத்தூர் பகுதியில் இருக்கக்கூடிய கெம்பனூர், அட்டக்கல், குப்பேபாளையம் போன்ற கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகளவில் இருப்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் அப்பகுதியில் ரேஷன் கடை கொண்டுவரவேண்டும் என்றும், பாதாளசாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இப்பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டமாக நொய்யல் ஆற்றை தூர்வாருதல், தொண்டாமுத்தூர் கலை அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தொண்டாமுத்தூரில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, சிறுவாணி சாலை விரிவாக்கம், பேருந்து நிலையம் இது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தொகுதி அமைச்சரின் தொகுதி என்பதால் பல்வேறு நலத்திட்டங்கள் இந்த தொகுதியில் நிறைவேற்றப் பட்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கிராமப்பகுதிகளில் பல அடிப்படை வசதிகள் தேவை என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.