சூடான் நாட்டிலிருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தெற்கு பகுதி மட்டும் பிரிந்து சுதந்திரம் அடைந்தது. இதற்கு தெற்கு சூடான் என்ற பெயரும் வந்தது. தெற்கு சூடான் சுதந்திரம் அடைந்திருந்தாலும் அந்நாட்டிற்குள்ளேயே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தாலும் அங்கு வன்முறைகள் ஓய்ந்த பாடு இல்லை. இதற்கு காரணம் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் மற்றும் போட்டி இன குழுக்கள் போன்றவை நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களை தூண்டியும் அரங்கேற்றியும் வந்துள்ளது.

இந்த நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மூன்று நாள் பயணமாக தெற்கு சூடானுக்கு சென்றார். அவரின் வருகையை ஒட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கிடையில் போப் பிரான்சிஸ் அவர்களின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தெற்கு சூடானின் ஈகவடோரியா மாகாணத்தில் உள்ள கஜோ கேஜி என்ற இடத்தில் கால்நடை பண்ணைக்குள் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் புகுந்தது. அவர்கள் பண்ணைக்குள் இருந்தவர்களை கூர்மையான ஆயுதங்களால் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் சாய்த்தனர். இந்த கொடூர தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் பெண்கள் ஆவர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.