ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக என அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதாக அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உட்பட பலர் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சிவக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு மாறாக கொட்டகை அமைத்து செயல்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி 120 இடங்களில் செட் கொட்டகை அமைத்து நாற்காலி போட்டுள்ளனர். முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள இந்த கொட்டகைகளுக்கான செலவு கணக்கை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க திட்டமிட்டுள்ளார். எனவே இந்த செட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பயன்படுத்தும் வாகனங்களில் உள்ள கொடிகள் மற்றும் சின்னங்கள் போன்றவைகளையும் அகற்ற வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.