தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கு… தொகுதி வாரியாக… வாக்கு செலுத்துவதற்கு தனி மையம்..!!

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 7 சட்டமன்ற தொகுதியிலும் தபால் வாக்கினை செலுத்தினர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் அமைதியாக நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதல் பாதுகாப்பு பதற்றமான வாக்குச்சாவடிகளில் போடப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவப்படை வீரர்களும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் காவல்துறையினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 720 துணை ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், காவல் துறையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். இதற்காக காவல்துறையினர் சட்டமன்ற தொகுதி வாரியாக நியமனம் செய்யப்பட்டு அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும் தபால் வாக்கினை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நேற்று முன்தினம் தனி மையம் அமைக்கப்பட்டது.

அதன்பின் காவல்துறையினர் அந்த மையங்களுக்கு சென்று தபால் வாக்கினை செலுத்தியுள்ளனர். இதில் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில், திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு மையம் அமைக்கப்பட்டிருந்தது. சட்டமன்ற தொகுதி வாரியாக தபால் வாக்குகளை செலுத்துவதற்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் வரிசையில் காத்திருந்து தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினர். இதே போல் 2,150 காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தபால் வாக்கினை செலுத்தினார்.