தேர்தல் நெருங்கியாச்சு… பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்… காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் விழிப்புணர்வு போட்டிகளும் மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.