இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம் செயல்முறை விளக்கம் கொடுக்க இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த புதிய மெஷின் தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களுடைய கருத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் தமிழக மாநில தேர்தல் தலைவர் சத்யபிரதா சாஹூ அதிமுகவுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி திரும்ப அனுப்பிவிட்டார். இதனையடுத்து மீண்டும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், அதையும் எடப்பாடி பழனிச்சாமி திரும்ப அனுப்பி விட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கடிதத்தை வாங்க மறுப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் மூலமாக சத்யபிரத சாஹூ தெரியப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியுடன் எடப்பாடி பழனிச்சாமி மோதுவது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.