தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி…. தேர்தல் ஆணையம் உத்தரவு… !!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார்.

அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சனிக்கிழமையும் ( ஜன.29) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குகிறது. மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் கட்ட பயிற்சி வருகின்ற 31-ஆம் தேதியும், 2-ம் கட்ட பயிற்சி பிப்ரவரி 9-ம் தேதியும், 3-ஆம் கட்ட பயிற்சி பிப்ரவரி 18-ஆம் தேதியும் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *