தேசிய கொடி ஏற்றுதல்….. “சாதிய பாகுபாடுகள் இருக்கக்கூடாது”…. தலைமை செயலர் இறையன்பு அதிரடி உத்தரவு..!!

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் :

சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைப்பது மரபாகும்.

ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசிய கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ தேசிய கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு 17-ன்படி “தீண்டாமை” ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. “தீண்டாமை” காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

1989 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு 3(1)(m)ன் படி பட்டியல் ஜாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலகப் பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்ய விடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் மேற்சொன்ன சட்டத்தின் பிரிவு 3(1)(m)ன் படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அச்சுறுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை கருத்தில் கொண்டு, எதிர்வரும் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

அதுபோல அனைத்து கிராம ஊராட்சிகளிலும் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடு இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல்துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்த புகார்களை கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் (help line)? ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு 14.08.2022  மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும் அது குறித்து அறிக்கையை 17.08.2022 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *