நேற்று எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்றார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். அவர் பேசும்போது திமுகவை நேரடியாக விமர்சித்து பேசினார்.

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் வாரிசு ஆட்சி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பாஜகவை ஒழித்த நிலையில் இனி வரும் தேர்தலில் மன்னர் ஆட்சியையும் ஒழிக்க வேண்டும். பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆக கூடாது. தமிழ்நாட்டை கருத்தியல் தலைவர்கள் ஆள வேண்டும் என பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, தமிழ்நாட்டில் நடைபெறுவது முடியாட்சி அல்ல. குடியாட்சியே. தெரிஞ்சி பேசணும். அளந்து பேசணும். விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். மேடையில் பேசுவது மட்டுமே கை கொடுக்காது. ஆட்சியாளர்களை விஜய் தேர்வு செய்ய முடியாது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். விஜய் அல்ல என பேசியுள்ளார்.