துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 5000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் மீட்பு பணியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவலானது வெளியாகி உள்ளது. உறைய வைக்கும் நள்ளிரவு குளிரில் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உயிருடன் இருப்பவரை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. மீட்பு பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக உயிரிழப்பு 8 மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால மீட்பு அதிகாரி கேத்தரின் ஸ்மால் வுட் பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என தகவல் தெரிவித்துள்ளார். பலாயிரம் வீடுகள் இடிந்து விட்டதால் ஆயிரக்கணக்கானோர் வீடு இல்லாமல் கடும் குளிரில் வாடி வருகின்றனர். துருக்கியில் 1999 ஆம் ஆண்டு 17,500 பேரை பலிகொண்ட நிலநடுக்கத்தை விட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதம் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 10 மாகாணங்களிலும் 3 மாதம் அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.