தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை… வசமாக சிக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்… 2 பேர் கைது..!!

சிவகங்கையில் அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேரை காரில் ஆயுதம் கொண்டு சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுபட்டி என்கிற கிராமத்தில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய அதிமுக செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 11.45 மணி அளவில் இவர் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் சிவகங்கை நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடி வழியாக சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர் அவருடைய வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாள் ஒன்று அவருடைய காரின் பின்பக்க சீட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாளை காவல் துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து சிவகங்கை நகர் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் கார் டிரைவர் வேல்மணி மற்றும் ஒன்றிய செயலாளர் செல்வமணி ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.