தமிழக பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக எச். ராஜா இருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என்று பதிவிட்டு இருந்தார். அதோடு திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூறாக பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் எச். ராஜா தன் மீதும் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருடைய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் எச். ராஜா தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு 5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக எச். ராஜா மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.