ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இளம் பெண் தெரசா பெர்னாட்டஸ் என்பவர் உலக சுற்றுலா பயணமாக பல நாடுகளுக்கு சென்று வந்தார். அதன்படி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி இந்தியாவை சுற்றி பார்ப்பதற்காக அந்த இளம் பெண் மும்பை வந்துள்ளார். அங்கு எலிபாண்டா குகைகளை சுற்றி பார்த்துக் கொண்டிருந்த அவர் தென் மும்பை பகுதியில் பேருந்தில் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட சக பயணிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரசாவின் மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் தெரசாவின் மூலையில் முக்கிய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் மூளையின் அழுத்தத்தை குறைக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் அந்த இளம் பெண் மூளை சாவடைந்துள்ளார். இது குறித்து தெரசாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அந்த இளம் பெண்ணின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி தெரசாவின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், நுரையீரல் போன்றவற்றை மருத்துவர்கள் அகற்றினர். அவரது இதயம் சென்னையில் உள்ள நோயாளிக்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் மும்பையை சேர்ந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது. இதனால் ஐந்து பேர் மீண்டும் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.