திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளத்தை  சேர்ந்தவர் செல்வ சங்கர். இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பதவி வகிக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு செல்வ சங்கரின் வீட்டிற்கு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து செல்வ சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றது தெரியவந்தது. அவர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் துணியை கட்டியுள்ளனர்.

இதேபோல ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதனால் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை  தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.