கேரளா வயநாட்டில் கடந்த 30 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில் பல குழந்தைகள் தங்களது தாய், தகப்பனை இழந்து எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் 533 குழந்தைகள் நிவாரண முகாமில் தங்கி இருக்கின்றனர். அவர்களில் 5 பேர் பெற்றோர் இருவரையும் இழந்ததோடு இன்னும் 6 குழந்தைகள் தந்தை அல்லது தாயை இழந்து இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் தற்போது அவர்களுடைய உறவினருடன் இருக்கிறார்கள். இதுபற்றி தகவல் வெளியான நிலையில், கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.

அதனால் அரசின் விதிமுறைகளின் படி குழந்தைகளை தத்தெடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கார்த்திகா அன்னா தாமஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, பலரும் நினைக்கிறார்கள் குழந்தைகளை நேரடியாக வந்து அழைத்து சென்றுவிடலாம் என்று ஆனால் அவ்வாறு செய்ய இயலாது. பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்.

இதுதொடர்பாக பலரும் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். எனவே ஆர்வம் இருக்கிறவர்கள் www.cara.wcd.gov.in அல்லது சிஏஆர்ஏ தத்தெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் அவர்களுடைய விவரம் மற்றும் வசிக்கும் இடம் என பல செய்திகள் ஆராயப்பட்டு நடைமுறைகள் முடிந்த பின்னரே அவர்கள் குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதன் பின் அவர்கள் தேர்வு செய்ததும், அதற்கான சான்றிதழ் தயாரிக்கப்படும். இதையடுத்து ஆணையம் அனுமதி வழங்கிய பிறகு பெற்றோர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள்.

மேலும் 2 மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் குழந்தையை தத்தெடுப்பதற்கான இறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு, குழந்தையின் பிறப்பு சான்றிதழ்  வழங்கப்படும் என்று அவர் கூறினார்.