ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தாட்கோ நிறுவனம் மூலமாக வங்கிப் பணிக்கான பயிற்சிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலமாக பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தாட்கோ நிறுவனமானது தனியார் வங்கியுடன் இணைந்து வங்கி கணக்கு நிர்வாக பணிக்கான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வழங்க உள்ளது.

இந்த பயிற்சியில் சேர்வதற்கு 22 வயது முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான பயிற்சி 20 நாள் அளிக்கப்படும். சென்னையில் பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் தங்கி படிப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சி முழுமையாக முடிக்கும் பட்சத்தில் நிறுவனத்தினால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

அதேபோல் தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக பணியில் சேர்வதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தால் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தையும் அல்லது 04365-250305, 9445029466 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம். இதில் பயிற்சி பெறுவதற்கு தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பயிற்சிக்கான மொத்த செலவையும் தாட்கோ நிறுவனம் வழங்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.