தவானை விட பெரிய வீரரா ராகுல்?….. கொந்தளித்த ரசிகர்கள்…… பிசிசிஐ-யை விளாசிய முன்னாள் வீரர்..!!

ஒவ்வொரு தொடருக்குமே ஒரு புதிய கேப்டன்களை இந்திய அணி நிர்வாகம் மாற்றி வருவது மட்டுமில்லாமல், தற்போது ஷிகர் தவானை திடீரென மாற்றியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொந்தளித்துள்ளார்..

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை வெற்றியோடு முடித்துள்ள இந்திய அணி அடுத்த கட்டமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டாவது தர இந்திய அணி விமான மூலம் ஜிம்பாப்வே நாட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டது. இதற்கு முன்னதாக ஐபிஎல்க்கு பின் காயம் காரணமாக கேல் ராகுல் எந்த தொடரிலும் விளையாடவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடவில்லை. எனவே இளம் வீரர்களை வைத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 3-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்து சாதனையை நிகழ்த்தியது.

இதையடுத்து ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் ஷிகர் தவானை கேப்டனாக பிசிசிஐ  அறிவித்திருந்தது. அதன்பிறகு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே எல் ராகுலும் இருப்பார்கள் என பிசிசிஐ அறிவித்தது. இதில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை..

இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே தொடர்கான இந்திய அணியில் கேப்டனாக கே.எல் ராகுல் செயல்படுவார் என்று பிசிசிஐ  அறிவித்தது. இது தவான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் தவானை கேப்டனாக அறிவித்துவிட்டு, திடீரென கே எல் ராகுல் கேப்டனாக இருப்பார் என்று கூறியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது.

ஏனென்றால் 2013 முதல் நிரந்தர தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ஷிகர் தவான் நிறைய சரித்திர வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நல்ல கேப்டன்ஷிப் செய்து வொயிட்வாஷ் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.  2019க்கு பின் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறிய நிலையில், 35 வயதை கடந்து விட்டார் என்பதற்காக டி20 அணியிலிருந்து கழற்றிவிட்டது அணி நிர்வாகம்.. அதன் பின் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, ராகுல் காயம் அடையும் போது அல்லது ஓய்வெடுக்கும் போது அவர்களுக்கு பதிலாக வாய்ப்பளித்து அந்த தொடரிலேயே கழற்றி விடுகிறது பிசிசிஐ.

இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரில் தவான் கேப்டன்ஷிப் செய்ய தகுதியற்றவரா? இல்லை அவரைவிட ராகுல் கேப்டன்ஷிப் செய்வதற்கு உயர்ந்தவரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. மேலும் சீனியர் வீரர் தவான் தலைமையில் ராகுல் விளையாட மாட்டாரா என்று அணி நிர்வாகத்தை விளாசி வருகின்றனர்.. நிறைய வெற்றிகளையும் நல்ல அனுபவத்தையும் பெற்றுள்ள தவானுக்கு நன்றி காட்டாமல் அவரை வேண்டுமென்றே அவமானப்படுத்துவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.. இது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு கிட்டத்தட்ட இந்தியா விளையாடுகின்ற ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு புதிய வீரர் கேப்டனாக செயல்படுவது வாடிக்கையாகி விட்டது என்பது அனைவரது கருத்தாக இருக்கிறது.

இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரில் ராகுல் சாதாரண ஒரு வீரராக விளையாடினால்  எதுவும் மோசமாகி விடுமா என்ன என்று அணி நிர்வாகத்தையும் பிசிசிஐயையும் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம்  விளாசியுள்ளார். இது பற்றி அவர் அளித்த பெட்டியில், இந்த தொடரில் கே எல் ராகுல் ஒரு சாதாரண வீரராக விளையாடியிருக்க வேண்டும். அவரை கேப்டன் அல்லது துணை கேப்டனாக நியமனம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் அணிக்கு வருகிறார். மறுபக்கம் சீனியர் வீரரான தவான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அற்புதமாக ஆடி வருகிறார். எனவே நீங்கள் ஷிகர் தவானுக்கு தான் கேப்டனாக அறிவிப்பதில் முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். இது மட்டுமின்றி ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சிறப்பாக அணியை நடத்தினார் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும் அந்த தொடரில் பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இளம் வீரர்களை வைத்து ஒயிட்வாஷ் செய்தார். இவரின் தலைமையில் நிறைய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அந்தத் தொடரை சிறப்பாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஷிகர் தவான் பில்டிங் செட் செய்வது, சரியான யுக்திகளை கையாள்வது போன்ற அனைத்து அம்சங்களையும் செய்து அசத்தினார். இளம்வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் வகையில் கேப்டனாக செயல்பட்டார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 7 மாதத்திற்கு 7 கேப்டன் ஒவ்வொரு தொடருக்குமே ஒரு புதிய கேப்டன் என்று கருவேப்பிலையை போல இந்திய அணி நிர்வாகம் கேப்டன்களை மாற்றி வருகிறது.இது போன்ற கேப்டன்ஷிப்  மாற்றங்கள் வேடிக்கையாகவும் கேள்வியையும் எழுப்புகிறது. இது போன்ற ஒரு முடிவை எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டும்.. நீங்கள் வலுவான ஒரு அணியை தயார் செய்ய வேண்டுமே தவிர இப்படி அவசர கோலத்தில் முடிவுகளை எடுக்கவே கூடாது.. ஏனென்றால் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் அவர் அந்த தொடரில் நாம் என்ன செய்யலாம் என்று திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அவரை மாற்றினால் எதுவுமே சரியாக இருக்காது. இது அந்த வீரரின் மன உறுதியை பாதிக்கும் என்று காட்டமாக கூறினார்..