தவறாம எல்லாரும் வந்துருங்க..! இளைஞர்கள் இயக்கத்தினர்… வாக்காளர்களுக்கு தேர்தல் அழைப்பிதழ்..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் வீடு, வீடாக சென்று தேர்தல் அழைப்பிதழ் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை திருமண அழைப்பிதழ் போல் அச்சடித்து இளைஞர்கள் இயக்கத்தினர் தாம்பாளத்தட்டில் வைத்து வெற்றிலை பாக்குடன் வாக்காளர்களிடம் வீடு, வீடாக சென்று வழங்கினர்.

மேலும் அந்த அழைப்பிதழில் வாக்குப்பதிவு நாள், வாக்கு பதிவு தொடங்கும் நேரம், முடிவடையும் நேரம், வாக்குக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வாங்க கூடாது, தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்குச்சாவடிக்கு செல்லும்போது வாக்காளர் அட்டை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.