தலை தீபாவளி கொண்டாட சென்ற மாப்பிள்ளை… திரும்ப வரும்போது நேர்ந்த சம்பவம்… பெரம்பலூர் அருகே சோகம்..!!

பெரம்பலூர் அருகே தலை தீபாவளி கொண்டாடி விட்டு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் எல்லைகள் மீது மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூரை அடுத்த விளாமுத்தூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் பழனிமுத்து. இவருக்கு 2 மகன்கள். இதில் இளைய மகன் வெங்கடேஷிற்கு (27), கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பக்கத்து கிராமமான நொச்சியத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது மகள் அனிதாவை திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் வெங்கடேஷ்-அனிதா இருவரும் நொச்சியம் கிராமத்திற்கு தலை தீபாவளி கொண்டாட சென்றனர். நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் நொச்சியம் கிராமத்தில் இருந்து விளாமுத்தூருக்கு சென்றார்.

மாமூண்டியான் கோவில் அருகே சென்றபோது சாலை ஓரத்தில் இருந்த எல்லைக்கல் மீது மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வழியே சென்றவர்கள், அதை கண்டு பழனிமுத்துவிற்கு தகவல் கொடுத்தனர். அவர் இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். திருமணமாகி 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம், இருகிராமங்களிலும் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *