“தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்”… சீமான் பரபரப்பு பிரசாரம்..!!

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி வேட்பாளர் காசிராமனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் வேட்பாளர் காசிராமனை ஆதரித்து நேற்று முன்தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- பணம் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதனை மாற்றி குணம் இருப்பவர்களும் அரசியல் செய்ய முடியும் என்று வந்தவர்கள் நாங்கள். கூட்டு பண்ணை முறை மூலம் நாட்டில் நல்ல விவசாயம் செய்வோம். உயர்கல்வி, ஆரம்பக்கல்வி என அனைத்தையும் இலவசமாக வழங்குவோம். உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்களை அரசே விற்பனைக்காக எடுத்துச் சொல்லும்.

ஐந்து தலைநகரங்களை தமிழகத்தில் உருவாக்கி நிர்வாகம் செய்வோம். அதுமட்டுமில்லாமல் அனைத்து தலைநகரங்களிலும், ஒரு தலை நகரத்தில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருவோம். எங்களுடைய கைகளை உயர்வடையச் செய்யுங்கள். கிராமம் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தலை சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம் என்று அவர் பேசினார். இதில் பூம்புகார் மண்டலச் செயலாளர் கலியபெருமாள், தொகுதி வேட்பாளர் காளியம்மாள், மாவட்ட செயலாளர் காளிதாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.