தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன்பிறகு தமிழில் துணிவு திரைப்படமும் ஜனவரி 11-ல் ரிலீஸானதால் துணிவு படத்தை விட வாரிசு பின் தங்கியதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது என்று கூறப்பட்டாலும் தமிழை தாண்டி பிற மொழிகளில் வாரிசு திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

குறிப்பாக தெலுங்கு சினிமாவில் ஜனவரி 14-ல் ரிலீஸ் ஆன வாரிசு வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. தெலுங்கு ஆடியன்ஸ் வாரிசு படத்தை கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகியது. இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மட்டும் தான் வாரிசு படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியிலும் வாரிசு திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி ஹிந்தியில் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் பல இடங்களில் தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ஹிந்தியில் முதல் நாளில் 80 லட்சம் ரூபாய் வசூல் செய்த நிலையில், சனிக்கிழமை 1.50 கோடி ரூபாய் வசூலானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் விடுமுறை இருப்பதால் ஹிந்தியில் வாரிசு திரைப்படம் இன்னும் 3 நாட்களில் ரூ. 5 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.